பேர் சொல்லும் பிள்ளை

0a11

வழக்கமாகக் காப்பியைக் கொடுத்துவிட்டுச் சமையலறைக்குத் திரும்பிச் சென்றுவிடுபவள் அன்று என் அருகிலேயே அமர்ந்தாள். அதிலிருந்து ஏதோ பேச விரும்புகிறாள் என்று தெரிந்து கொண்டேன். சிரித்துக் கொண்டே அவள் தோளில் கைபோட்டு, “என்ன, புடவையா, நகையா?” என்றேன் வேடிக்கையாக.

அவளும் என்மீது சாய்ந்து கொண்டு “ஏன், புடவை, நகையெல்லாம் விடப் பெரிசாக் கேக்கக் கூடாதா?” என்று என் முகத்தை நிமிர்ந்து பார்த்து மோகன(மாய் ஒருகாலத்தில் இருந்த) புன்னகை ஒன்றை வீசினாள். அட, இந்த வயதிலும் மயக்கப் பார்க்கிறாள்!

“சரி, வேறென்ன வேணும்?”

“எல்லாம் உங்க பிள்ளையப் பத்திதான்.”

அதைக் கேட்டதும் என் முகம் சுருங்கியது. வெடுக்கெனக் கையை எடுத்துவிட்டுக் காப்பியைக் குடிக்கத் தொடங்கினேன்.

“புள்ள நீங்க வரணும்னு எவ்வளவு ஆசையாயிருக்கான், தெரியுமா?” என்றாள்.

“நான் அவன் டாக்டரா வரணும்னு எவ்வளவு ஆசையாயிருந்தேன், தெரியுமா?” என்று வெடித்தேன்.

“எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லயா? அதுதான் நிறைவேறாதுன்னு ஆகிப்போச்சே! இனிமேலாவது அவனுக்குப் பிடித்தமான வகையிலே இருந்துட்டுப் போட்டும்னு விட்டுடலாமே!”

எப்படி முடியும்? பெற்ற பிள்ளை படிக்காமல் சீரழிந்து திரிவதைப் பார்த்துக் கொண்டு எந்தத் தகப்பனால் சும்மா இருக்க முடியும்? நான் வளர்ந்த விதமென்ன, என் ஒரே பிள்ளையை வளர்த்த விதமென்ன! என்னை வளர்த்து ஆளாக்குவதற்கு ஏழை விவசாயியான என் தந்தை பட்ட பாடென்ன! அதெல்லாம் இவளுக்கே புரியாது. அவனுக்கு எங்கே புரியப்போகிறது?

நான் அமெரிக்கா வந்ததும் என் குடும்பத்துக்கு விடிவு காலம் வந்தது என்று எண்ணினேன். நான் சிறு வயதில் பட்ட கஷ்டமெல்லாம் என் சந்ததியினருக்கு வராமல் பார்த்துக் கொள்ள விரும்பினேன். என் மகனை டாக்டராக்கி வசதியாக வாழ வைக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவனோ படிப்பில் பூஜ்ஜியமாய்ப் போய்விட்டான்.

சிறு வயதிலிருந்தே கூத்தும் கும்மாளமுமாக வளர்ந்து விட்டான். அவனுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து நான்தான் கெடுத்துவிட்டேன். சிறுவனாய் இருந்தபோது நான் அனுபவிக்காத சிறு இன்பங்கள் அவன் அனுபவிக்கட்டுமே என விட்டது தவறாய்ப் போய்விட்டது. முதலில் கிதாரை வைத்துக் கொண்டு டொய்ங் டொய்ங் என்று எப்போதும் அடித்துக் கொண்டு அமெரிக்க நண்பர்களுடன் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இருந்தான். பிறகு அம்மாவிடம் அடம் பிடித்து எங்கிருந்தோ ஒரு பழைய பியானோவை வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொண்டான்.

நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். பியானோவில் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தைச் செலுத்தும்படி. கடைசியில் அந்த சத்தத்தைச் சகிக்க முடியாமல் என் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளத் தொடங்கினேன். கணக்கும் அறிவியலும் அவனுக்குச் சுத்தமாக வரவில்லை. அப்படிப்பட்ட பிள்ளை எப்படிப் பிழைக்கப் போகிறான்?

பிள்ளைகள் என்றால் அந்த வினோதினி மாதிரி இருக்க வேண்டும். என் மகனுக்கு இரண்டு வயது சிறியவள். தன் பள்ளியிலேயே முதலாவதாக வந்து இப்போது ஹார்வர்டு போகப் போகிறாள். சில வாரங்கள் முன்புதான் நகரத்திலுள்ள இந்திய சமுதாயமே ஒன்று திரண்டு அவளுக்குப் பாராட்டு விழா நடத்தியது. அதில் கலந்து கொண்ட எனக்கு அவமானமாக இருந்தது. அவள் சிறு வயதிலிருந்தே படிப்பில் புலியாக இருந்ததைக் கூறி அவள் பெற்றோர் பெருமைப் பட்டுக் கொண்டார்கள். எல்லோரும் அவளையும் அவள் பெற்றோரையும் பாராட்டிப் பேசிப் புகழ்ந்தார்கள்.

இந்த நினைவுகளால் தாக்குண்டதால் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், காப்பியைக் குடித்ததும் வெளியேறினேன். வீல் போன போக்கில் கார் போக, கார் போன போக்கில் நான் போனேன். போகிற வழியில் எப்படியோ ‘சாந்தி கஃபே’ வந்தது. அதைப் பார்த்ததும் கார் சடன் பிரேக் போட்டு, சட்டென்று நின்றது. உள்ளே போய் இன்னொரு கப் காப்பி குடித்து அங்கு உள்ளவர்களிடம் அரட்டை அடித்ததில் என் மனச்சுமை கொஞ்சம் குறைந்தது. பிறகு வீடு திரும்பினேன்.

வீட்டில் அவர்கள் இருவரும் இல்லை. முன்னதாகவே சென்றிருப்பார்கள். மேஜையில் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் கிடந்தது. எனக்குரியது! எடுத்து வெறுப்புடன் பார்த்தேன். அரங்கத்தின் முகவரியும் நிகழ்ச்சி தொடங்கும் நேரமும் இருந்தன.

“புள்ள நீங்க வரணும்னு எவ்வளவு ஆசையாயிருக்கான், தெரியுமா?” என்ற கெஞ்சல் மீண்டும் என் மனத்தில் ஒலித்தது. பெற்ற மனம் இளகத் தொடங்கியது.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். நிகழ்ச்சி தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. காரில் சென்றமர்ந்து வழிகாட்டியைத் தூண்டி முகவரியை உள்ளிட்டேன். அக் கருவி சற்றே சிந்தித்து, வழியைக் கணக்கிட்டுக் காண்பித்து அரைமணி ஆகும் என்றது. கிளம்பினேன்.

நான் அரங்கம் சென்று அடைந்தபோது ஆள் நடமாட்டமே இருந்ததாகத் தெரியவில்லை. அங்குதான் நிகழ்ச்சி நடக்கிறதா என்ற ஐயம் எனக்குள் ஏற்பட்டது. அரங்கத்தினுள் செல்வதற்கான கதவுகளில் ஒன்றைத் திறந்து உள்ளே நுழைந்தேன். அதற்கப்பால் இன்னொரு கதவு இருந்தது. இரு கதவுகளுக்கும் இடையே நின்றிருந்த சிப்பந்தி,

“நிகழ்ச்சி தொடங்கப் போகிறது. இப்போதுதான் கதவுகளைச் சாத்தினோம்” என்றார்.

“பரவாயில்லை. நான் சென்று அமர்ந்து கொள்கிறேன்.” என்றேன். அவர் சட்டென்று என் முகத்தை ஒருகணம் நிமிர்ந்து பார்த்து விட்டு, என் கையிலிருந்த டிக்கெட்டை வாங்கி விளக்கு வெளிச்சத்தில் ஏந்திப் பார்த்தார்.

“ஓ, நீங்கள் குடும்பத்தினரா?” என்றவர், சற்றே நிதானித்து, பிறகு,

“என்னுடன் வாருங்கள். என்னால் இயன்றதைப் செய்கிறேன்.” என்று வேறொரு கதவருகில் அழைத்துச் சென்று அதைச் சன்னமாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தார். பிறகு என்னைச் சைகையால் வரச்சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.

அது எவ்வளவு பெரிய அரங்கம் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். பார்வையாளர்கள் இருக்கைகள் இரண்டு மாடிகளில் அடுக்கடுக்காக அமைக்கப் பட்டிருந்தன. எங்கும் மக்கள் நிறைந்திருந்தார்கள். அவ்வளவு மக்கள் இருந்தும் அங்கு ஒரு பேரமைதி நிலவியது.

அவ்வரங்கத்தின் அழகையும் பெருமையையும் கண்டு மலைத்து விட்டேன். அழைத்து வந்தவரோ சைகையால் என்னை அவசரப் படுத்தி முன்பக்க வரிசை ஒன்றுக்குள் நுழையச் செய்தார். அவ்வரிசையில் வெறுமையாய் இருந்த ஒரே ஒரு இருக்கையை விளக்கு வெளிச்சத்தால் சுட்டிக் காட்டினார். அதற்கு அடுத்த இருக்கையில் என் மனைவி இருப்பது தெரிந்தது.

“மன்னிக்கவும்” என்று கேட்டுக் கொண்டே அவர்கள் காலை மடக்க ஒவ்வொருவரையும் அரை இருளில் கடந்து செல்லும்போது அனைவரும் நல்ல உடைகள் அணிந்திருப்பது தெரிந்தது. ஆண்கள் எல்லோரும் கோட்டும் சூட்டும் அணிந்திருந்தனர். பெண்கள் அலங்கார ஆடைகளுடன் இருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே வெள்ளைக்காரர்கள். என் மனைவியும் பட்டுப் புடவையில் இருந்தாள். நான் வழக்கம்போல் சென்னையில் அளவெடுத்துத் தைக்கப்பட்ட அரைக்கைச் சட்டை அணிந்திருந்தேன். நான் வருவதைப் பார்த்து என் மனைவி ஆவலுடன் கழுத்தை நீட்டி முகமலர்ச்சியுடன் சிரித்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். என் இருக்கையைக் கீழிறக்கி ஒரு கையால் பிடித்துக் கொண்டிருந்தாள்.

நான் சென்று அமர்ந்ததும் அதற்காகவே காத்திருந்ததுபோல மேடையின் திரை விலகியது. எல்லோரும் கைதட்டினார்கள். நான் அதற்குமுன் பார்த்திருந்த இன்னிசைக் கச்சேரிகளில் மேடையில் சுமார் பத்துப்பேர் இருந்து பலவிதமான இசைக் கருவிகளை அடித்துக் கொண்டு திரைப்படப் பாடல்களைப் பாடுவார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் இருந்து பார்ப்பார்கள். இங்கோ மேடையிலேயே சுமார் நூறுபேரும் பார்வையாளர்கள் ஆயிரக் கணக்கிலும் இருந்தனர்.

அந்த நூற்றுவரில் என் மகனைக் கண்டுபிடிப்பது மிக எளிதாயிருந்தது. மேடையில் மிகப் பெரிய பியானோ ஒன்று இருந்தது. அதன் முன்தான் என் மகன் உட்கார்ந்திருந்தான். பெரிய பெரிய உணவகங்களில் பரிமாறுவோர் அணிந்திருப்பதுபோல் உடையணிந்திருந்தான். சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளைக்காரர் மறைவிலிருந்து வந்து மேடையில் முன் நின்று எல்லோருக்கும் வணக்கம் செலுத்தினார். பார்வையாளர்கள் பலமாகக் கைதட்டி அவரை வரவேற்றார்கள்.

கொஞ்சநாள் முன்பு தன் பிள்ளைக்கு ஏதோ ஆடிஷன் கிடைத்ததென்று ஊரையே அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தாள் என் மனைவி. அதைத் தொடர்ந்து என் மகன் பெயரில் வந்து குவிந்த வாழ்த்து அட்டைகள் என் குப்பைத் தொட்டியை நிறைத்து விட்டன. பிறகு பிராக்டிஸ், பிராக்டிஸ் என்று அலைந்து கொண்டிருந்தான். அதெல்லாம் இவருடன்தான் என்று இப்போது புரிந்து கொண்டேன்.

அவர் கொஞ்சம் பேசிய பிறகு வாத்தியங்கள் முழங்கத் தொடங்கின. எனக்குக் கொட்டாவி வரத் தொடங்கியது. கச்சேரி நெடுநேரம் நீண்டுகொண்டே போவதாக எனக்குத் தோன்றியது.

ஒரு கட்டத்தில் என் மகன் மட்டும் பியானோ வாசித்துக் கொண்டிருந்தான். மற்ற எல்லா வாத்தியங்களும் அமைதியாய் இருந்தன. என் பிள்ளையை வேலை செய்ய வைத்து விட்டுத் தொண்ணூற்றொன்பது சோம்பேறிகள் சும்மா இருக்கிறார்களே என்று எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

அவன் வாசித்து முடித்ததும் அதுவரை மூச்சு விடுவது கூடக் கேட்காவண்ணம் அமைதியாக இருந்த பார்வையாளர்கள் திடீரென்று மிகுந்த ஆரவாரத்துடன் கைதட்டத் தொடங்கினார்கள். அவ்வளவும் என் மகனுக்குத்தான் என்று அறிந்து சற்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்தேன். மலைப்பினால் நான் மட்டும் கைதட்டாமல் சும்மா இருந்தேன்.

இடைவேளை வந்தது. விளக்குகள் ஏற்றப் பட்டன. என் அருகில் இருந்த வெள்ளைக்காரர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.

“நீங்கள்தான் பியானோ வாசிப்பவருடைய தந்தையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” என்றார்.

என் உடல் நிறத்தையும் முகச் சாயலையும் வைத்து அடையாளம் கண்டு கொள்வது எளிதுதான். ஆனால், அவர் சொன்னது? பியானோ வாசிப்பவரின் தந்தை! அவனைத்தான் என் மகன் என்று அடையாளம் காட்டி எனக்குப் பழக்கம். ஆனால் இப்போது நான் இருக்கும் சூழ்நிலை வேறு!

“ஆம், அவன் என் மகன்தான்!” என்றேன் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.

‘”மிக அருமையாக வாசிக்கிறார். இவ்வாறான மகனைப் பெற்றிருக்க நீங்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.” என்றார்.

Leave a comment