பகை நட்பு

01b

“குட் மார்னிங்! கொரட்டூர்னு ஒரு ஸ்டேஷன்…அங்க எங்க ட்ரெயின் இப்ப நின்னுட்டு இருக்கு. இஞ்சின்லேர்ந்து எட்டாவது கோச்.”

குறுஞ்செய்தி தூக்கத்தை மட்டுமில்லாமல் இனிய காலை கனவையும் சேர்த்து கலைத்தது.

ட்ரெயின் சென்ட்ரல் வர இன்னும் அரை மணி நேரத்திற்கு மேலாகும். அதற்குள் போய் விடலாம் என்று நினைப்பதற்குள் நித்திரா தேவி அவனை மீண்டும் ஆட்கொண்டாள்.

“பரத், பெரம்பூர் தாண்டிட்டோம். முந்தின மெஸ்ஸேஜுக்கு ஏன் பதில் அனுப்பல? வீட்டை விட்டு கிளம்பினாயா இல்லையா?”

மீண்டும் கைப்பேசியின் நச்சரிப்பை அணைத்துவிட்டு கண் மூடினான்.

“டேய்… எருமை மாடு!!!! சென்ட்ரல் ப்ளாட்ஃபார்ம்ல நிக்கறேன்டா. நீ வரியா இல்ல நானே விசாரிச்சிட்டு வரட்டா? கழுதை,  இதுக்கும் நீ ரிப்ளை அனுப்பலைன்னா நான் ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிடுவேன்.”

குறுஞ்செய்தி பரத்ராமை பதறி அடித்து எழுப்பியதற்கு காரணம் இதற்கு மேலும் பதில் அனுப்பவில்லை என்றால் இன்னும் எத்தனை மரியாதை குறைவாக அவள் திட்டுவாள் என்ற பயமா இல்லை தூக்கம் பாசத்தை வென்றுவிட்டதே என்று தன் மேலேயே வந்த கோபமா என்று அவனுக்கு தெரியவில்லை. ஒருவேளை தான் ஒருவனே எப்படி எருமை மாடாகவும் கழுதையாகவும் இருக்க முடியும் என்று அவளிடம் லாஜிக் சண்டை போட கூட இருக்கலாம். எது எப்படியோ அவள் எண்ணை அழுத்தி கைப்பேசியை காதில் வைத்தான்.

“குட் மார்னிங் செல்லம். சாரிடா. நைட் ஷிஃப்ட் முடிஞ்சு வரும்போதே மணி மூணு. அதான் கண் அசந்துட்டேன்”, பரத் குழைந்தான்.

“ம்…. ம்…”

“பிரயாணம் சௌகரியமா இருந்ததா?

“ம்… .ம்..”

“அம்மா அப்பா நல்லா இருக்காங்களா?”

“ம்… ..ம்…”

“ஆர்த்தி குட்டி….. கோவிச்சுக்காதடா”

“ம்…. ம்…”

“அடியே.. எருமை மாட்டோட தங்கச்சியே….”

இதற்கு மேல் கோபத்தை இழுத்து பிடிக்க வழி இல்லாமல் ஆர்த்தி சிரித்தாள்.

“எப்படிண்ணா இருக்க?”

“நல்லாயிருக்கேன். நீ எப்படி இருக்கே?”

“கசகசனு… காலையிலேயே உங்க ஊர்ல என்ன வெயில்?”

“காபி டீ எதாவது ட்ரெயின்ல வந்ததா?”

“எல்லாம் வந்தது. அந்த கலங்கல் தண்ணியை குடிச்சு என் நாக்கை கெடுத்துக்க வேண்டாம்னு பார்த்தேன்.”

“அப்ப சரி. ஸ்டேஷன் உள்ளேயே ஹோட்டல் இருக்கு. அங்க போய் எதாவது சாப்பிடு. நான் இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க வந்துடுறேன். சரியா?”

“ஓகே” , ராகம் பாடினாள்.

அவசரமாக தயாராகி பரத் கிளம்பினான்.

ஸ்பூனால் டம்பளில் பூஸ்டை கலக்கிக்கொண்டிருந்தவள் இவனை பார்த்ததும் காலை தாமரையாய் மலர்ந்தாள். கை அசைத்து தன் இருக்கும் இடத்தை காண்பித்தாள். பக்கத்தில் அவள் தோழியர் இருவர் இவனை பார்த்ததும் சிறிது தயக்கமாய் புன்னகைத்தனர். தன்னுடன் இன்னும் இருவர் வருவதாய் ஆர்த்தி சொன்னது நினைவு வந்தது. கிராமத்து பெண்கள் போல இருந்த இருவருக்கும் எம்.என்.சி கம்பெனியில் என்ன வேலை என்று பரத்திற்கு புரியவில்லை.

“நீ எதாவது சாப்பிடறயாண்ணா?”

“ம்ம்… நானும் டோக்கன் வாங்கிட்டு வரேன்.”

பரத் ‘செல்ஃப் செர்வீஸ்’ கௌன்டரில் நிற்கும் போது ‘ஹே ஆர்த்தி, வாட் எ சர்ப்ரைஸ்’ என்று ஒரு பரிச்சயமான குரல் கேட்டது. சட்டென்று இவன் திரும்பிய போது ஆர்த்தி தன் பெயரை சொல்லி அழைத்தவனிடம் அவசர அவசரமாக பரத் திசையை சைகையால் காட்டுவது தெரிந்தது.

‘இவனா?’ பரத் முகம் கடுகடுவென்று ஆனது. ‘இவன் ஏன் இங்கே வந்தான்?’

பரத் தட்டை எடுத்துக்கொண்டு தங்கையிடம் சென்ற போதும் அங்கேயே நின்று கொண்டிருந்தவன், பரத்தை பார்த்ததும் சிநேகமாய் முறுவலித்தான்.

“பரத்ராம்! எப்படி இருக்க?”

காது கேளாதவன் போல் பரத் தன் தட்டில் இருப்பதை உண்ண தொடங்கினான். தோழியர் சுவாரசியத்துடன் பார்க்க, ஆர்த்தி பார்வையாலேயே புதியவனை அனுப்புவதை கண்டும் பரத் நிமிர மறுத்தான்.

பரத்ராமின் குனிந்த தலையை பார்த்து பெருமூச்சு விட்டவாறு ஆர்த்தியிடம் ஒரு சின்ன ‘பை’யை உரைத்துவிட்டு கிளம்பினான் தீபக்.

தோழி பெண்கள் இருவரும் கை கழுவ எழுந்து செல்லும் வரை அமைதி காத்த ஆர்த்தி பரத்ராமை பார்த்து பொருமினாள், “அண்ணா நீ செய்யறது கொஞ்சம் கூட சரியில்லை. அவர் என்ன தப்பு செஞ்சாருனு இப்படி முறைப்பு காட்டறே?”

‘உன்னால தான்’ என்று மனதிற்குள் குமுறியவன் தங்கையை பார்த்து முறைத்தான்.

“நீ இப்ப எதுக்கு சென்னை வந்திருக்க? இன்டெர்வியூக்கா இல்ல என் கூட சண்டை போடவா?”

“அதில்லண்ணா..”

“நீ வந்த வேலையை மட்டும் கவனி. பஞ்சாயத்து பண்றத மொதல்ல நிறுத்து.”

இதற்குள் கனகாவும் லலிதாவும் திரும்பி வந்து விட, இவர்கள் வாக்குவாதம் தற்காலிகமாக நின்றது.

திருவல்லிக்கேணியில் இரண்டு படுக்கையறை வசதி கொண்ட தன் ப்ளாட்டிற்கு பரத் மூவரையும் சின்ன காரில் அழைத்து வந்தான். வீடு வசதியாக இருந்தது. இவர்களை குளித்து தயாராக சொல்லிவிட்டு பால், பழம், பிஸ்கெட் போன்ற அத்தியாவச பொருட்கள் வாங்கி வர வெளியே சென்றான்.

ஒரு மணி நேரத்தில் தயாராகி தன் முன் நின்ற ஆர்த்தியை ஏற இறங்க பார்த்தான். சல்வார் உடையில் கச்சிதமாக தோன்றினாள். கையில் ஃபைலை ஏந்தி தோளில் கைப்பையை மாட்டியவாறு இவனிடம் வந்தாள்.

“போலாமா அண்ணா?”

“ம்.. “ , என்றவன் அப்பொழுது தான் மற்ற இருவரும் கிளம்பவில்லை என்பதை உணர்ந்தான்.

“அவங்களுக்கு இண்டர்வ்யூ இல்லையா?”

“இருக்கு, ஆனா நான் போற இடத்துல இல்ல. வேற இடம், அது நாளைக்கு.”

பரத்திடமிருந்து மாற்று சாவியை வாங்கி தோழியரிடம் கொடுத்துவிட்டு அவனுடன் ஆர்த்தி கிளம்பினாள்.

அன்று இரவு வீட்டினுள் பரத் நுழையும் போதே முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் வாயில் ஜாங்கிரியை திணித்தாள்.

“வேலை கிடைச்சாச்சு. பத்து நாளில் ஜாயின் பண்ணனும்.”

“வாழ்த்துக்கள்”, அவள் தலையில் கை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்த்தினான்.

சமையல் அறையில் இருந்து வந்த வாசனை மூக்கை துளைத்தது. வெகு நாட்களுக்கு பிறகு வீட்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்த சகோதரனை வாஞ்சையுடன் பார்த்தாள். திடீரென்று ஞாபகம் வந்தவனாய் பரத் கேட்டான், “நீங்க எல்லாம் சாப்பிட்டாச்சா?”

“எங்க? சோத்தை பார்த்தவுடன் பொளந்து கட்ட ஆரம்பிச்சுட்டியே. மிச்சம் இருக்குமா இல்ல மறுபடி சமைக்கணுமானு இல்ல எங்க யோசனை ஓடுது?” ஆர்த்தியின் கிண்டலை கண்டு கொள்ளாதவன், அவள் தோழியரின் சிரிப்பில் நெளிந்தான்.

“சாரி… நீங்களும் வந்து சாப்பிடுங்க.”

சலசலவென்ற பேச்சிலும் கலகலவென்று சிரிப்பிலும் அன்றைய மீதி பொழுது கடந்தது.

காலையில் எழுந்தவுடன் ஆர்த்தி பரத்திடம் சொல்லிவிட்டாள்.

“நீ இன்னிக்கு சிரம பட வேண்டாம். ஆட்டோக்காரன் தோராயமா எத்தனை கேட்பானு சொல்லு போதும். நான் இவங்கள கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்.”

“இடம் எப்படி கண்டுபிடிப்ப?”, அவன் நக்கலுக்கு அவளிடம் பதில் தயாராக இருந்தது, “மனசுல தைரியம் இருக்கு, வாயில வார்த்தை இருக்கு இது போதாதா?”

இவளிடம் வாய் குடுத்தால் உடனே ஆபீஸ் போக முடியாது என்று அனுபவத்தில் உணர்ந்தவன் அவள் கேட்ட தகவலை தந்து விட்டு கிளம்பி போனான்.

இரவு உணவின் போது தான் வீட்டில் ஆர்த்தியின் தோழியர் இல்லாதது பரத்திற்கு உறைத்தது.

“அவங்களுக்கும் வேலை கிடைசாச்சு. பஸ் பிடிச்சு ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு வாரத்துல திரும்பி வருவாங்க. கனகாவும் லலிதாவும் அவங்க வேலை செய்ய போற இடத்துக்கு பக்கத்தில ஒரு சின்ன ப்ளாட் பார்த்து தங்க போறாங்க.”

“ஓஹோ. இப்ப உன்னோட ப்ரோகிராம் என்ன?”

“இன்னும் 2 நாள் சென்னையில இருந்து ஊரை சுத்தி பார்க்கணும். அப்புறம் ஊருல அம்மா அப்பாவோட ஒரு வாரம் இருந்துட்டு மூட்டை முடிச்சோட  திரும்பி வந்து உன் கழுத்தை அறுக்கணும்”, சிரித்தாள்.

“சென்னை வரணும்னு எப்ப நீ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சயோ அப்பவே என் கழுத்துக்கு ஆபத்துனு தெரியும்.” தானே சொன்னபோது சிரித்தவள், அவனும் அதையே சொல்ல “பரத் அண்ணா” என்று சிணுங்கினாள்.

வேலை எதுவும் உருப்படியாக இல்லாமல் சும்மா இருப்பவர்க்கு தான் காலம் மந்த கதியில் போவது போல இருக்கும். அந்த கவலை அண்ணன் தங்கை இருவருக்குமே ஏற்படவில்லை. ஆர்த்தி வேலை ஏற்றுக்கொண்டு 8 மாதங்கள் ஆகிவிட்டன. ஆறு மாதம் பயிற்சி காலம் முடிந்து அவள் வேலையும் உறுதியாகிவிட்டது. வீட்டு வேலை வெளி வேலை எதுவானாலும் இருவரும் பகிர்ந்து செய்ததால் வாழ்க்கை சுமுகமாக சென்றது. அதற்காக அண்ணன் தங்கை இருவரும் அவ்வபோது வாய் போர் செய்வதை நிறுத்தவில்லை.

“அண்ணா, நான் ஒரு டிப்ளமா கோர்ஸ் செய்ய போறேன். ஈவினிங் தான் க்ளாஸஸ் இருக்கும். வாரத்துல மூணு நாள்.”

“ஓஹோ”, விட்டேற்றியாக பதிலளித்துவிட்டு அதற்கு மேல் எதுவும் பேசாமல் விர்ரென்று வெளியே போய்விட்டான். ஆர்த்தி பெருமூச்சுடன் அவன் போவதை பார்த்துக்கொண்டு நின்றாள்.

தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் போது ஆர்த்தியையும் அழைத்துக்கொண்டு புது துணி வாங்க போகலாம் என்று பரத்ராமிற்கு தோன்றியது. அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி ஆர்த்தி அலுவலகம் முன்பு அவன் காத்திருக்க, அவள் ஹெல்மெட்டால் முகம் மறைந்த யாரோ ஒருவனுடன் பைக்கில் ஏறி செல்வது கண்டு கடைக்கு போகாமல் வீடு திரும்பிவிட்டான். இதை பெரிதுபடுத்தி அவன் எதுவும் சிந்திக்கவில்லை. அது ஏன் என்றால் திருமணம் என்று வரும்போது அண்ணன் தங்கைக்கும், தங்கை அண்ணனுக்கும் வாழ்க்கை துணை தேர்வு செய்வதாக செய்து கொண்ட ஒப்பந்தம். எந்த விதத்திலும் ஆர்த்தி அதை மீற மாட்டாள் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது. வீடு திரும்பிய ஆர்த்தியிடம் அன்று மட்டுமில்லை, அதற்கு பிறகு சில முறை பார்த்த பிறகும் இவன் எதுவும் நினைக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. அவன் யார் என்று அறிந்த போது தான் எரிமலை வெடித்தது.

தீபக். சிறுவயது முதல் ஒன்றாக படித்து, நண்பன் என்ற போர்வையில் எதிரியாக மாறியவன். தன் கனவு கோட்டைகளை தகர்த்து தரை மட்டம் ஆக்கி விட்டு வெளிநாடு சென்றவன். ஆர்த்தி முதன் முதலாக சென்னை வந்த போது நடந்தது தற்செயலான சந்திப்பு என்ற நினைவை இப்பொழுது பொய்யாக்கியவன். ஒதுக்க நினைத்த எண்ணங்கள் முட்டி மோதி பரத்தின் மனதை நிறைத்தன.

அப்பொழுது பரத்ராமின் தந்தை ஊரில் லேத் பட்டறை வைத்திருந்தார். அதை பெரிய அளவில் விரிவாக்கி தொழில் செய்யவேண்டும் என்ற கனவுடன் பொறியியல் இளங்கலை பட்டம் முடித்து, தொழில் துறை படிப்பிற்காக பரத் அஹமதாபாத் சென்றிருந்த வேளை. அப்பொழுது தான் ஆர்த்தியும் பனிரெண்டாம் வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள். நன்றாக படிக்க கூடியவள். அவளும் பொறியியல் படிப்பு முடித்து தன்னுடன் தொழிலில் இணைந்தால் எல்லா விதத்திலும் அனுகூலம், குடும்ப சொத்தும் வெளி ஆட்களுக்கு போகாது என்ற கணக்குடன் பரத்ராம் அவளை அதற்கு தயார் செய்து இருந்தான். அவள் கல்லூரி படிப்பு முடிவதற்குள் தானும் சிறிது காலம் சேமித்து விடலாம் என்ற நம்பிக்கை.

வகுப்புகள் தொடங்கி இரண்டு மாதங்களுக்குள் என்ன காரணத்தாலோ அவள் படிப்பில் சரிவு ஏற்பட்டது. தானும் பக்கத்தில் இல்லை, பெற்றோருக்கும் விஷயம் தெரியாது என்ற நிலையில் நண்பன் தீபக்கின் உதவியை நாடினான். அந்த நேரம் உபகார சம்பளத்துடன் எம் எஸ், பிஎச்டி செய்ய வெளிநாட்டிலிருந்து தீபக்கிற்கு பிரபலமான பல்கலை கழகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் கல்லூரி தொடங்கும் என்பதால் தீபக் ஆறு மாத காலம் வீட்டிலிருந்தபடி எதோ செய்து கொண்டிருந்தான். வெளிநாடு கிளம்பும் வரை நண்பனுக்காக அவன் தங்கைக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தீபக் சம்மதித்தான். ஆர்த்தி பொறியியல் படிப்பிற்கு தேவையான உயர்ந்த மதிப்பெண்கள் பெற்றாள். உண்மை. ஆனால் தீபக் சொன்னான் என்று பரத் விருப்பத்திற்கு எதிராக பி.ஏ பட்ட படிப்பில் சேர்ந்துவிட்டாள்.

“தீபக் தம்பி தான் சொல்லிச்சு. கல்யாணம் பண்ணி வெளிய போற பொண்ணுக்கு எதுக்கு இத்தனை செலவு செய்யணும். அதுக்கு பதிலா நகை நட்டு செய்யலாமேனு. எங்களுக்கும் அது சரினு பட்டாலும், ஆர்த்தி விருப்பம் தான் முக்கியம்னு அவள பார்த்தோம். ஆனா அவ எதுவுமே மறுத்து சொல்லலை, நாங்க என்னப்பா செய்ய முடியும்?” பரத்தின் தந்தை சொன்னதை தாயும் ஆமோதித்தாள்.

நண்பன் என்று நம்பியதற்கு நன்றாக முதுகில் குத்திவிட்டான். இவன் மட்டும் வெளிநாடு சென்று மேல் படிப்பு முடித்து லட்சம் லட்சமாக சம்பாதிப்பான், ஆனால் உள்ளூரில் தொழில் செய்ய நினைப்பவன் கனவுகளை பொசுக்குவான், அவன் குடும்பத்தினர் மூளையை சலவை செய்து குடியை கெடுப்பான். தீபக்கின் தொடர்பு அந்த நொடியிலேயே கத்தரிக்கப்பட்டது. இன்று வரை அதாவது நான்கு வருடங்களாக விடுபட்ட தொடர்பு. தான் மட்டும் விட்டொழித்த தொடர்பு, தங்கை தொடரும் உறவு என்று அறியாமல் இருந்த முட்டாள்தனத்தை தாங்கமுடியாமல் அவள் வரவிற்கு ஆத்திரத்துடன் காத்திருந்தான்.

“எங்க போயிட்டு வர?” கண்கள் சிவந்து வார்த்தைகளை துப்பியவனை சிறிது பயத்துடன் பார்த்தாள்.

“க்ளாசுக்கு”

“படிக்கிற லட்சணம் தான் தெரியுதே. படிக்கிறேன் படிக்கிறேனு இன்னும் எத்தனை நாள் என்னை ஏமாத்துவே?” பழைய கோபம் வெளிவந்தது.

“நிஜமா படிக்க தான் போயிட்டு வரேன்.”

“காதல் பாடமா?”

“என்ன உளறல்? என்னாச்சு உனக்கு ?ஏன் இப்படி பேசற?” குழப்பமாக பார்த்தாள்.

“போதும் நிறுத்துடி. தீபக்கும் நீயும் சேர்ந்து இன்னும் ஏன் என் முதுகுல குத்தறீங்க?”

இப்பொழுது தான் விஷயம் புரிந்தவளாக அவனை திடுக்கிட்டு பார்த்தாள். குரோதமாக பரத்தின் கண்கள் அவளை வெறித்து பார்த்தன. அதை தாங்க முடியாமல் தலை கவிழ்ந்தாள். அவள் முகத்தில் முதலில் இருந்த கலக்கம் சிறிது சிறிதாக மறைய திடீரென்று தோன்றிய திடத்துடன் அவனை நோக்கினாள்.

“சொல்றேன். ஆதியோட அந்தமா எல்லாத்தையும் சொல்றேன். அதுக்கு முன்னால எனக்கு பசிக்குது. நீயும் வா.”

இருவரும் மௌனமாக உணவருந்தி விட்டு எதிரும் புதிருமாக சோபாவில் அமர்ந்தனர். பரத் அவளை இன்னும் கோபமாக பார்க்க, சிறிது யோசனையில் இருந்தவள் திடும்மென நிமிர்ந்தாள்.

“அண்ணா, எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து, நீ தான் எனக்கு ஹீரோ. நீ எது சொன்னாலும் அது தான் எனக்கு வேத வாக்கு. உனக்கு தெரியாதது எதுவும் இல்ல. உன் எண்ணங்கள் என் எண்ணங்கள் ஆச்சு, உன் கனவுகளை நானும் என்னோடதா நினைக்க ஆரம்பிச்சுட்டேன்…. என் வயசு அப்படி.”

பெருமூச்சுடன் தொடர்ந்தாள், “நான் லெவன்த் படிக்கிற போது வாணினு ஒரு மாற்று திறனாளி எங்க க்ளாஸுல சேர்ந்தா. அவளுக்கு கை கால் சரியா இருக்காது, பேச்சு குழறும். மத்தவங்க ஒதுங்கி இருக்கும் போது ரொம்ப ஏங்குவா. எனக்கு ரொம்ப பாவமா இருக்கும். சின்ன சின்ன உதவி செய்வேன். அதுக்கு அவ முகத்துல சந்தோஷத்துக்கு அறிகுறியா ஒரு கோணல் சிரிப்பு வரும். அந்த சிரிப்பை பார்த்தா அன்னிக்கு பூரா எனக்கு நல்லது நடக்கும். இது தற்செயலான விஷயம் தான், ஆனாலும் மனசுல எதோ நிம்மதி. உங்கிட்ட சொன்னா கேலி செய்வனு தெரியும். ட்வெல்த் வரும் போது நீ வெளியூர் போயிட்ட. ஒரு பக்கம் ஸ்கூல்ல மார்க் மார்க்குனு ப்ரெஷர் போடறாங்க, மறுபக்கம் இஞ்சினியரிங் எனக்கு சரி படுமானு குழப்பம். எந்த விஷயத்தை பத்தியும் உன்னோட பேச முடிஞ்ச எனக்கு, படிப்பு விஷயம் மட்டும் பேச முடியல. என்ன வெச்சு நீ கண்ட கனவுகள் என்னாகும்னு புரியல. நீ என்ன சொல்லுவேனு பயம். எல்லாம் சேர்ந்து அப்ப மனரீதியா மட்டுமில்ல உடல்ரீதியாவும் நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். மனமும் உடலும் பரஸ்பரம் பாதிக்குதுனு அப்ப கனெக்ட் பண்ண தெரியல. அம்மா டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போனாங்க. எந்த மருந்தும் வேலை செய்யல. அப்ப தெய்வமா வந்தது தீபக் தான்.”

“உங்கிட்ட கூட சொல்ல தயங்கின விஷயங்கள் அவரோட பேசியிருக்கேன். அம்மாக்கு கூட தெரியாம என்னை கௌன்ஸிலிங் அழைச்சிட்டு போனார். அவங்க ரெகமண்ட் பண்ண கைனக்காலஜிஸ்ட் கிட்ட அம்மாவோட என்னை அனுப்பி வெச்சு என் ஹெல்த் சரியாக வெச்சாரு. நிறைய பேசுவாரு, என்னையும் பேச வைக்க, எதிர்காலம் பத்தின தெளிவு கொஞ்சம் கொஞ்சமா எனக்கு வர ஆரம்பிச்சுது. ஆனாலும் நீ என்ன சொல்லுவியோனு எனக்கு அன்னிக்கு ரொம்ப பயம். அதான் எல்லா பழியையும் தன் மேல போட்டுக்கிட்டு நான் விருப்பப்பட்டதை படிக்க வழி ஏற்படுத்தி குடுத்தாரு.”

“உனக்கு தெரியுமா? தீபக் ப்ரெண்ட் ஒருத்தர் மாற்று திறனாளிகளுக்கு கொரட்டூர்ல ஒரு ஸ்கூல் நடத்துறாரு. அங்க தான் நான் சாயங்காலம் க்ளாஸ் அட்டெண்ட் பண்றேன். தீபக் அங்க கூட்டிட்டு போயிட்டு திரும்ப பத்திரமா என்னை தெரு முனைல விட்டுட்டு போவாரு. அந்த உயர்ந்த மனுஷனை போய் என்னவெல்லாம் நெனச்சிட்ட?”

அவள் பேச்சு ஒவ்வொன்றும் சாட்டையடியாய் அவன் மனதில் விழுந்தது. ஒரு அண்ணனாக தான் செய்ய வேண்டியதை அண்ணனின் நண்பனாய் தீபக் பொறுப்புடன் செய்ததை புரிந்து கொள்ளாத மடையனாய் இருந்ததை நினைத்து குன்றி குறுகி பேச்சிழந்து போனான்.

மறுநாள் மாலை ஆர்த்தி குறிப்பிட்ட பள்ளிக்கு பரத் சென்றான். ஆச்சரிய படும்படியாக அவனை அங்கு வரவேற்றது கனகா. ஆர்த்தியின் தோழி.

“வாங்கண்ணா, ஆர்த்தியை பார்க்க வந்தீங்களா?” இதற்குள் லலிதாவும் வந்துவிட்டாள்.

அவள் வரமாட்டாள் என்று தெரிந்தாலும் “ஆமாம்” என்று தலை ஆட்டி வைத்தான்.

“அவ இன்னிக்கு வரமாட்டாளே”

“நீங்க ரெண்டு பேரும் இங்க தான் வேலை செய்யறீங்களா?”

இருவரும் தலை ஆட்டினர்.

“தீபக்….” என்று தயங்கி இழுத்தான்.

“அவரும் ஆர்த்தி வரும்போது தான் வருவாரு.” அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று குழம்பியவாறு தெருவில் நடந்தவனை தடுத்து நிறுத்தியவர் தீபக்கின் தந்தை.

“அடேடே, பரத் ராம் நீயும் இந்த ஊருல தான் இருக்கியா? தீபக் சொல்லவேயில்ல.” திருடனுக்கு தேள் கொட்டியது போல பரத் உணர்ந்தான்.

“இல்ல அங்கிள். நான் வெளியூர் தான். தீபக் இங்க வருவானு கேள்விபட்டு இங்க வந்தேன். நீங்க எப்ப அங்கிள் ஊருலேர்ந்து வந்தீங்க?”

“உனக்கு என்ன ஒரு விஷயமும் தெரியாதா?”

“என்ன அங்கிள்?”

“நாங்க ஒரு வருசமா இங்க தான் இருக்கோம். இந்த ஸ்கூல் கூட தீபக் தான் நடத்துறான், ஆனா வெளிய யாருக்கும் தெரியாது.”

“என்ன அங்கிள் சொல்றீங்க?”

மேலும் அவர் சொன்ன விஷயங்கள் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தன.

“எங்கண்ணா போனே? ஃபோனும் எடுக்க மாட்டேங்கற, நான் வேற ஒங்கிட்ட என்னென்னமோ பேசிட்டேன்”, வீடு திரும்பியவனை கவலையோடு நோக்கினாள்.

“உள்ள வா”, அமைதியாக கைபிடித்து அழைத்து சென்று அமர வைத்தான்.

“முன்னால நாம ஒரு ஒப்பந்தம் போட்டோம், அதுக்கு இப்பவும் கட்டுபடுவியா?”

“ஏன் உனக்கு இந்த சந்தேகம்?”

“நீ நம்பற மாதிரி நான் நடந்துக்கலையே, அதான் கேட்டேன்.”

என்ன சொல்ல வருகிறாய் என்பது போல பார்த்தவளுக்கு பதில் கிடைக்கவில்லை. தீபக்கின் தந்தை சொன்னது அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஓடி அவன் கவனத்தை கலைத்தது.

“படிக்கிறேன்னு வெளிநாடு போனவன் காலேஜுல சேரவேயில்லைப்பா. அங்கேயே வேலைல சேர்ந்துட்டான். மூணு வருஷம் சம்பாதிச்சதை கொண்டு வந்து இந்த ஸ்கூல் ஆரம்பிச்சுட்டான். பரத், ஒன்னு சொல்றேன். பணம் காசு பிரச்சனை இல்லை. இது நடத்தறதுலேயும் பிரச்சனையில்லை, ஆனா அவன் என்னமோ திருப்தி இல்லாம இருக்கற மாதிரி தான் இருக்கு. பிஎச்டி பண்றது அவன் கனவா இருந்தது. இன்னும் இருக்குனு தான் தோணுது. மறுபடியும் போய் படிக்கவும் முடியும், இப்பவும் அவன் ப்ரொபசர் கூப்பிடறாரு. ஆனா இவன் மனசுல என்ன தடுமாற்றம்னு தெரியல. நீ கொஞ்சம் விசாரியேன்.”

தங்கை சொன்னது , தீபக் அப்பா சொன்னது, தனக்கே தெரிந்தது என்று எல்லாம் வைத்து பார்த்த போது தீபக்கின் மனது நட்பு, காதல், லட்சியம் என்று மும்முனை தாக்குதலில் போராடிக்கொண்டிருப்பதை பரத்திற்கு தெளிவாக புரியவைத்துவிட்டது.

வாசலில் அழைப்பு மணி ஒலி கேட்டு கதவை திறந்தவள் தீபக்கை பார்த்து திகைத்தாள்.

“பரத்ராம் வந்துட்டு போனதா அப்பா சொன்னாரு. உனக்கு என்ன பிரச்சனையோனு ஓடி வந்தேன்.”

“உள்ள வா தீபக்”, பரத் தோழமையாய் அழைத்தான்.

புருவங்கள் சுருங்க தீபக் உள்ளே வந்தான். ஆர்த்தி இருவரையும் குழப்பமாக பார்த்தாள்.

“ஆர்த்தி, நம்ம ஒப்பந்தபடி உனக்கு நான் காட்டற மாப்பிள்ளை தீபக் தான்.”

தீபக்கும் ஆர்த்தியும் திகைப்புடன் பரத்தை பார்த்தனர்.

பரத் தொடர்ந்தான், “என் கனவுகள் நிறைவேற உன்னை கட்டாய படித்தினேன். எனக்காக நீ தியாகம் செய்ய துணிஞ்ச. என்னை விட நீ ஒரு படி மேல தான். ஆனா உனக்கும் கனவுகள் இருக்குனு கண்டுபிடிச்சு, அதுக்காக தன்னோட லட்சியத்தை விட்டுட்டு இத்தனை செய்திருக்கானே, இந்த தீபக்கை விட உயர்வா என்னால எவனை காட்ட முடியும்?”

“அவருக்கு இது பிடிக்குமானு நீ விசாரிச்சியா?” கோபமாக கேட்டவள் தன் சம்மதத்தை மறைமுகமாய் தெரிவித்துவிட்டாள்.

தீபக் கண்கள் பளிச்சிடுவதை கண்டு புன்னகைத்த பரத், “அதை நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ”, சொல்லிவிட்டு சமையலறையில் புகுந்து கொண்டான்.

“தீபக், அண்ணன் சொன்னது……..” தயங்கினாள்.

“முழு சம்மதம். ஆனா உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

“இதுவரைக்கும் அப்படி நான் நினைச்சதே இல்லை. ஆனா அண்ணன் கை காட்டின அந்த நேரத்துலேர்ந்து உங்களை தவிர யாரையும் நினைக்க முடியாதுனு தோணுது.”

“ஆர்த்தி..” நெருங்கி வந்து அவள் கை பிடித்தான்.

“ஆனா எனக்கு ஒரு விஷயம் பிடிக்கலை.”

“என்னம்மா?” தீபக் பதட்டமானான்.

“நானும் சுயநலவாதி ஆயிட்டேனேனு. சரி, நடந்ததை மாத்த முடியாது. ஆனா நடக்க போறதை சரி செய்யலாம். நீங்க உங்க கனவுகளை நிறைவேத்திட்டு வரும் வரை உங்க பொறுப்புக்களை ஏத்துக்கிட்டு காத்திருக்கேன். இது உறுதி.”

கற்களையும் முட்களையும் களைந்து பரத் நட்பை சீர் செய்துவிட்டான். தீபக் காதலுக்கு நிகரான காதலை ஆர்த்தி தந்துவிட்டாள். இனி தன் லட்சியத்தை தீபக் குறையில்லாமல் பார்த்துக்கொள்வான் என்ற நிம்மதி பரத்ராம் நெஞ்சில் நிறைந்தது.

Leave a comment